109 மாத அகவிலைப்படி வழங்கக் கோரி ஓய்வு போக்குவரத்து தொழிலாளர் தீர்மானம்
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல அமைப்பின் 4ம் ஆண்டு பேரவைக் கூட்டம் நடந்தது. இதில் 109 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படியை வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினர். ராமநாதபுரம் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கிளைத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மண்டல தலைவர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். மண்டல நிர்வாகி மணிக்கண்ணு வரவேற்றார். துணைத்தலைவர் மாதவமூர்த்தி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கிளை செயலாளர் கண்ணபிரான் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் செல்வராஜ் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். ஒய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகி முருகேசன், கிருஷ்ணன், அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி அய்யாதுரை ஆகியோர் பேசினர். மண்டல துணை பொது செயலாளர் ஜே.பவுல்ராஜ் நிறைவுரையாற்றினார். பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எஸ்.ராமசாமி, செயலாளராக எம்.நாகராஜ், பொருளாளராக ஜி.கண்ணபிரான் தேர்வு பெற்றனர். ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 109 மாத அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.போக்குவரத்துக்கழகங்களில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்க வேண்டும்.போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து அரசே வழங்க வேண்டும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.