கீழக்கரை பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் ஆர்.ஓ., பிளான்ட்கள்
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பகுதிகளில் முறையான அனுமதியின்றி செயல்படும் ஆர்.ஓ., பிளான்டுகளால் நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அரசு விதிமுறைகளை வெளிப்படையாக மீறி செயல்பட்டு வரும் ஆர்.ஓ., குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது: கீழக்கரை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட ஆர்.ஓ., பிளான்டுகள் எவ்வித தெளிவான அனுமதி, கட்டுப்பாடு, கண்காணிப்பின்றி செயல்பட்டு வருகிறது. நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி விற்பனை செய்வதால் குடிநீர் தேவைக்கே தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய வருவாய் துறை, உள்ளாட்சி நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாசில்தார் ஆய்வு மேற்கொண்டதில் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அவை செயல்படுத்தப்படாத நிலையில் கண்காணிக்கவும் எந்த தொடர் ஆய்வும் தற்போது வரை நடைபெறவில்லை. இதனால் ஆர்.ஓ., பிளான்ட் உரிமையாளர்கள் அரசின் விதிமுறைகளை புறக்கணித்து தன்னிச்சையாக நிலத்தடி நீரை தொடர்ந்து சுரண்டி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றனர்.