தரமற்ற பணியாமல் பள்ளி கட்டடம் சேதம் ரூ.1.63 கோடி நிதி வீணடிப்பு: மக்கள் புகார்
ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஒன்றியம் பனையடியேந்தல் அரசு உயர்நிலைப்பள்ளி ரூ.1 கோடியே 63 லட்சத்தில் கட்டப்பட்டு 4 ஆண்டுகளில் கூரை இடிந்து விழுகிறது. தரமற்ற பணி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.பனையடியேந்தல் கிராமத்து இளைஞர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:பனையடியேந்தல் அரசு உயர்நிலை பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். 2021 ல் ரூ.1 கோடியே 63 லட்சத்தில் பள்ளிக் கட்டடம் கட்டினர். தரமற்ற பணியால் 4 ஆண்டுகளில் தற்போது கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கு காரணமான ஒப்பந்ததாரர், அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான முறையில் பள்ளிக்கு கட்டடம் கட்டித்தர வேண்டும். மேலும் ராமநாதபுரத்தில் இருந்து பனையடியேந்தல் வரை காலை, மாலை நேரங்களில் அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். சாயல்குடி, சிக்கல், உத்தரகோசமங்கை வழியாக ஏற்கனவே இயங்கிய அரசு பஸ்சை மாணவர்கள் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.