| ADDED : நவ 14, 2025 04:14 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காலை முதல் மதியம் வரை பெய்த கன மழையால் போதிய வடிகால் வசதியின்றி மழை நீருடன் பாதாள சாக்கடை நீரும் தேங்கியதால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திற்குள் மக்கள் பாதிக்கப்பட்டனர். மழையில் நனைந்து பள்ளிக்கு சென்ற மாணவர்கள் சிரமப்பட்டனர். வடகிழக்கு பருவமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்கிறது. நேற்று காலை 6:30 மணி முதல் மதியம் வரை மழையால் ராமநாதபுரம் நகர், சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால்கள் பராமரிக்கப் படாமல் உள்ளதால் குளம்போல ரோடுகள், தாழ்வான பகுதிகளில் தேங்கியது. மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்றனர். ஒம்சக்திநகர், பாரதிநகர், கிருஷ்ணாநகர், மதுரை- ராமேஸ்வரம் ரோட்டில் தண்ணீர் குளம்போல தேங்கியதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் சிரமப்பட்டனர். அரசு மருத்துவக்கல்லுாரி நுழைவுப்பகுதி மழைநீர், குழந்தைகள் வார்டிற்கு செல்லும் பகுதியில் கழிவு நீரும் தேங்கியதால் நோயாளிகள், மக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர். மழைநீரை ஊருணிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.