மன்னார் வளைகுடா கடலில் கிடைக்கும் சிங்கி இறால்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறது
சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடற்கரை கிராமங்களான மூக்கையூர், மாரியூர், ஒப்பிலான், முந்தல், வாலிநோக்கம், நரிப்பையூர், ரோஜ்மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்கடல் பகுதிகளில் அதிகளவில் ஏற்றுமதி தரம் வாய்ந்த சிங்கி இறால்கள் பிடிபடுகின்றன.மணிச்சிங்கி, கிளிச்சிங்கி, தாளிச்சிங்கி என பல்வேறு வகைகளில் சிங்கி இறால்கள் இங்கு கிடைக்கின்றன. சிங்கி இறால் என்பது ஓடுடைய கணுக்காலி எனலாம். இவற்றின் உடலில் காணப்படும் கடினமான மேலோடு அவற்றை பாதுகாக்கின்றன. சிங்கி இறால்களின் உடல் 19 பாகங்களால் ஆனது. அந்த பாகங்கள் தடித்த ஓடால் மூடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாகங்களையும் இணைக்கும் இடத்தில் மெல்லிய தோல் இருக்கிறது. அதனால் தான் சிங்கி இறால்களால் எளிதாக வளையவும், நெளியவும் முடியும். இவை வளர வளர தங்கள் புறவன்கூட்டை அடிக்கடி கழற்றக் கூடியவை. இவற்றின் முதன்மை அடையாளமே அதன் நீண்ட கொம்புகள் தான்.சாட்டை போன்ற இந்த உணர் கொம்புகளை ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றன. இது தவிர இரு சிறு உணர்வு கொம்புகளையும் கொண்டுள்ளன. இவற்றின் உடல் முழுவதும் முன்னோக்கிய முட்கள் காணப்படும். சிங்கி இறால்கள் பின்னோக்கியும் நீந்தக் கூடியவை. பெண் சிங்கி இறால்கள் அதன் வாலில் குண்டூசி தலை அளவுள்ள பல ஆயிரக்கணக்கான முட்டைகளை சுமந்திருக்கும். இதன் வால் ஆண் இறாலை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் இருக்கும். கடலில் தகுந்த வெதுவெதுப்பு ஏற்படும் வரை இவை முட்டைகளை பொரிக்க செய்யாது. முட்டைகள் பொரித்ததும் அதில் இருந்து புழுக்கள் வெளிவரும். அவை நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு கடலின் மேற்பரப்பில் மிதக்கும். இதன் பெரும் பகுதி பிற உயிரினங்களுக்கு இரையாகி சில மட்டுமே தப்பித்து பிழைத்து கடலில் அமிழ்ந்து சிங்கி இறாலாக உருவெடுக்கின்றன.மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் தீவுகளை ஒட்டிய கடல் பாறை உள்ள இடங்களில் சிங்கி இறால்கள் அதிகம் வளர்கின்றன. இவை வெப்பப்பகுதி நீரில் வாழக்கூடியவை. வெப்பம் அதிகரிக்கும் போது இவை கரையை நோக்கி வரும். குளிர் மிகுந்தால் ஆழ்கடல் நோக்கி நகரும். கடலில் குளிரும் கொந்தளிப்பும் மிகுந்தால் இவை ஒன்றன்பின் ஒன்றாக ஆழ்கடல் நோக்கி வரிசையாக ஊர்வலம் போல செல்லத் துவங்கும். இந்த ஊர்வலத்தில் 50 இறால்கள் வரை ஒரே வரிசையில் செல்லும். பார்வை குறைபாடு உள்ள சிங்கி இறால்கள் கடலின் வெவ்வேறு பகுதிகளில் மாறும். தண்ணீரில் உள்ள இயற்கை பொருட்களின் வாசனை மற்றும் சுவையை உணர்ந்து செல்கின்றன. புவியின் காந்த புலத்தை கண்டறிந்து அதன் மூலம் சிங்கி இறால்கள் செல்ல முடியும். எதிரி மீன்கள் நெருங்கினால் தன் நீண்ட உணர்வு கொம்பை தன் உடலில் தேய்த்து கீச்சிடும் ஒலியை எழுப்பி அதன் மூலம் எதிரியை பயமுறுத்தி தன்னை காத்துக் கொள்கின்றன.மூக்கையூர் பகுதி மீனவர்கள் கூறியதாவது: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிபடும் சிங்கி இறால்கள் வெளிநாடுகளுக்கு உயிருடன் அப்படியே பாதுகாப்பாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடல் சீற்ற நேரங்களில் சிங்கி இறால்கள் பிடிபடுகின்றன. இவை அரை கிலோ முதல் 5 கிலோ வரை வளரக்கூடியவை. கிலோ ரூ.2000 முதல் ரூ.5000 வரை வளர்ச்சிக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உயிருடன் பெட்டியில் வைத்து கடற்கரை மண்ணால் நிரப்பி அவற்றை பார்சல் செய்து அனுப்புகின்றனர். வலைகளில் சிக்கி இறந்த சிங்கி இறால்கள் கிலோ ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிக சுவையும், ஊட்டச்சத்தும் நிறைந்தவை இந்த சிங்கி இறால்கள் என்றனர்.