உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராமப்புறங்களில் இயங்கும் துணை சுகாதார நிலையங்கள் பராமரிப்பில்லை; சேதமடைந்த கட்டடங்களில் இயங்குவதால் மக்கள் அச்சம்

கிராமப்புறங்களில் இயங்கும் துணை சுகாதார நிலையங்கள் பராமரிப்பில்லை; சேதமடைந்த கட்டடங்களில் இயங்குவதால் மக்கள் அச்சம்

சுகாதார அமைப்புகளை மக்களுடன் இணைப்பதில்துணை சுகாதார நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமங்கள், தொலைத்துாரப் பகுதிகளில் முதன்மை சுகாதார சேவைகள் பெரும்பாலும் துணை சுகாதார நிலையங்கள் மூலம் நடைபெறுகிறது.இவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் சுகாதார செவிலியர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை துணை சுகாதார நிலையத்தின் மூலம் எளிதில் பெற முடியும். இந்நிலையில் கிராமங்களில் உள்ள பெரும்பாலான நலவாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்களின் கட்டடங்கள் மிகவும் சேதமடைந்துள்ளது. சிறு மழை பெய்தாலும் கட்டடத்தை மழைநீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் செவிலியர்கள் அங்கு தங்கி பணியாற்ற முடியாத நிலை உள்ளது. கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு அவசர காலத்தில் சிகிச்சை பெற முடியாமல் பல கி.மீ., பயணம் செய்கின்றனர். செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் நேரம் குறித்த முறையான தகவல்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறியதாவது: நகர் மயமாக்கல் காரணமாக 5000 மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள பகுதிகளில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு துணை சுகாதார நிலையத்திலும் ஒரு செவிலியர், இரு பணியாளர்கள் பணியில் இருப்பர். சில இடங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் இரு கிராமங்களை சேர்த்து கவனித்து வருகின்றனர். மேலும் சில நாட்கள் களப்பணியில் ஈடுபடுவர். தமிழ்நாடு முழுவதும் 300 துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் ரூ.137.60 கோடியில் கட்டப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளோம். விரைவில் சேதமடைந்த சுகாதார நிலையங்களை இடித்து விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை