மின்னல் தாக்கியதில் கோயில் கோபுரம் சேதம்
கமுதி : -கமுதி அருகே சின்னஆனையூரில் மின்னல் தாக்கியதில் அங்காள பரமேஸ்வரி கோயில் கோபுரம் சேதமடைந்து அதில் இருந்த கற்கள் கீழே விழுந்ததில் பக்தர்கள் இருவர் காயமடைந்தனர். கமுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மேகமூட்டமாக மின்னலுடன் மழைபெய்தது. நேற்று மாலை கமுதி அருகே சின்னஆனையூர், மருதங்கநல்லுார், பசும்பொன் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் சின்னஆனையூரில் அங்காள பரமேஸ்வரி கோயில் கற்கோபுரத்தின் சிறுபகுதி சேதமடைந்து கீழே விழுந்தது. அச்சத்தம் கேட்டு கோயிலில் தரிசனம் செய்து வெளியே வந்த சிருமணியேந்தலைச் சேர்ந்த இருவர் இதில் சிறுகாயமடைந்தனர். இதையடுத்து பரிகார பூஜை செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.