அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழுவை செயல்படுத்த கோரிக்கை பெயரளவில் நடக்கிறது
சிக்கல்: அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் முறையாக செயல்பட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பள்ளி சார்ந்த பொது நல விஷயங்களை கொண்டு அவற்றை தீர்மானமாக நிறைவேற்றவும், செயல்படுத்தவும், பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே மேலாண்மை குழுவின் நோக்கம்.தற்போது பெரும்பாலான பள்ளிகளில் பெயரளவில் மட்டுமே செயல்படாத நிலையில் பள்ளி மேலாண்மை குழு உள்ளதாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர். சிக்கலை சேர்ந்த அரசுப் பள்ளி பெற்றோர் கூறியதாவது:பொதுவாக அரசுப் பள்ளிகளில் பொதுமக்களின் பங்களிப்புடன் பள்ளியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் மாணவர்களுக்கான கல்வித் திறனை உயர்த்தும் நோக்கம் கொண்டது பள்ளி மேலாண்மை குழு. அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறது.ஒவ்வொரு பள்ளியிலும் இக்குழுவின் கூட்டத்தை மாதந்தோறும் கூட்டி தீர்மானமாக நிறைவேற்றி அதற்கென உள்ள பிரத்தியேக செயலியில் பதிவேற்றம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும். ஆனால் இன்று பல அரசுப்பள்ளிகளில் இக்குழுவானது எந்த செயல்பாடும் இல்லாமல் பேரளவில் கணக்கு காட்டுவதற்கு மட்டுமே உள்ளது.கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர், அரசு பள்ளிகளை ஆய்வு செய்து பள்ளி மேலாண்மைக் குழு சிறப்பாக செயல்படவும் உரிய முறையில் ஆலோசனைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.