அள்ளிக்கொடுத்தாள் கடல் அன்னை மீனவர்கள் மகிழ்ச்சி
ராமேஸ்வரம்:தடைக்காலம் முடிந்து 62 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் விசைப்படகில் அதிக மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மீன்கள் இனப்பெருக்கத்திற்கு தடை, சூறாவளியால் தடை என 62 நாட்களுக்கு பின் ஜூன் 17ல் பாம்பனில் இருந்து 91 விசைப்படகில் மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். இதில் அனைத்து படகிலும் கிழாத்தி மீன், மாஊழா மீன், வெள மீன் உள்ளிட்ட பலவகை மீன்கள் ஏராளமாக சிக்கின.சராசரியாக ஒரு படகிற்கு ரூ.2 லட்சம் வரை விலை போனது. ஒரு படகிற்கு எரிபொருள், ஐஸ் பார்கள், உணவுப் பொருள்கள், மீனவர்களுக்கு கூலி என ரூ. 1.5 லட்சம் வரை செலவாகும். எதிர்பார்த்த வருவாய் கிடைக்கா விட்டாலும் திருப்தி தான் என மகிழ்ச்சியுடன் மீனவர்கள் தெரிவித்தனர்.ஜூன் 18ல் மீன்துறையிடம் அனுமதி டோக்கன் வாங்கி மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு மேல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் அனுமதி சீட்டு பெறாமல் 1300 விசைப்படகில் மீன்பிடிக்க சென்றது குறிப்பிடத்தக்கது.