கிராம சபை கூட்டங்களில் அலுவலர் பங்கேற்க வேண்டும்
கடலாடி: பொதுவாக கிராம சபை கூட்டங்கள் நடக்கும் போது அவற்றில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.கடலாடி, திருப்புல்லாணி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் நாளை(அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர்கள் தயாராகி வருகின்றனர். ஊராட்சியில் அடிப்படை கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக குடிநீர், மின்சாரம், சாலை வசதி, பொது சுகாதாரம், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், பசுமை வீடுகள் திட்டம் உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களும் முறையாக மக்களுக்கு போய் சேர்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் கூட்டமாக கிராம சபை கூட்டம் திகழ்கிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது:பெரும்பாலும் கிராம சபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு கிடைக்கும். கிராம சபை கூட்டங்களில் தொடர்புடைய அலுவலர்களான மின்சாரம், கல்வி, சத்துணவு மையம், வருவாய்த்துறை, கனிம வளத்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை ஊராட்சி செயலர்கள் மூலம் சுட்டிக் காட்டி அவற்றை நிவர்த்தி செய்வதற்கு கிராம சபை கூட்டம் பயன்படுகிறது. ஆனால் பெரும்பாலான ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுடன் குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் வருகின்றனர். சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களால் எவ்வித பயனும் இருக்காது.எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்துத் துறை அலுவலர்களும் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் பங்கேற்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறையை வகுக்க வேண்டும். இதன் மூலம் தீர்க்க முடியாத அத்தியாவசிய பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என்றனர்.