உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காற்று தடுப்பு அரணாக உள்ளது சவுக்கு மரங்கள்

காற்று தடுப்பு அரணாக உள்ளது சவுக்கு மரங்கள்

பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் அடர்த்தியாக சவுக்கு மரங்கள் வளர்ந்து காற்று தடுப்பு அரணாக விளங்குகிறது. சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து குளித்து மகிழ்கின்றனர். எனவே இப்பகுதியில் அடிப்படைவசதிகள், பொழுதுபோக்கு பூங்கா அமைத்து சிறந்த சுற்றுலா ஸ்தலமாக்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துப்பேட்டை அருகேயுள்ள இந்திரா நகர் மற்றும் தலைத்தோப்பு கடற்கரையோர பகுதிகளில் 2002ம் ஆண்டில் மாவட்ட வனச்சரகத்தால் நடவு செய்யப்பட்ட சவுக்கு மரங்கள் அடர்ந்து வளர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன. பேரலைகளின் தாக்கத்திலிருந்தும் மண்ணரிப்பு மற்றும் அதிகளவு காற்று வீசுதல் போன்றவைகளுக்கு இயற்கை அரணாகவே சவுக்கு மரங்கள் உள்ளது. இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் நீண்ட நெடிய வெள்ளை மணற்பாங்கான பகுதிகளில் ஆழம் குறைவான இடங்களில் குளித்து விட்டு திரும்புகின்றனர். கடற்கரையை ஒட்டிய கிராமப் பகுதிகளின் நிலத்தடி நீர் சுவையான குடிநீர் கிடைக்கும் வகையில் உள்ளது. பெரும்பாலும் இப்பகுதிகளில் சீமை கருவேல மரங்களுக்கு பதிலாக அதிகளவு தென்னை மற்றும் பனை மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. விடுமுறை நாட்களில் ஏராளமானோர் இந்திரா நகர் மற்றும் தலைத்தோப்பு பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு வந்து பொழுது போக்குகின்றனர். எனவே இவ்விடத்தில் குடிநீர், கழிப்பறை, பொழுதுபோக்கு சிறுவர்பூங்கா, சிற்றுண்டி உள்ளிட்டவைகள் அமைத்து சுற்றுலா மையாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ