ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 பள்ளிகளில் தலைமையாசிரியர் இல்லை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் கல்வி பாதிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 48 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் ராமநாதபுரம் மாவட்டம் பின்தங்கியதற்கு இதுவும் காரணமாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 71 அரசு மேல்நிலைப்பள்ளிகள் என 138 பள்ளிகள் உள்ளன. இதில் 14 மேல்நிலைப்பள்ளிகள், 34 உயர்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள்அவர்களது சொந்த மாவட்டம் அல்லது அருகிலுள்ள மாவட்டங்களுக்கு பணி மாறுதலில் சென்றுவிட்டனர். அத்துடன் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் தொடர்ந்து காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 48 பள்ளிகளில் மூத்த ஆசிரியர் தலைமையாசிரியராக பொறுப்பு வகிக்கின்றனர்.நிரந்தர தலைமையாசிரியர் இல்லாததால் நிர்வாகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தலைமையாசிரிராக பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியாத நிலையும் உள்ளது. இதனால் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக பத்தாம் வகுப்பு, மேல்நிலை அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.மேலும் 2024-25ம் கல்வி ஆண்டியில் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சியில் பிளஸ் 2ல் 19ம் இடமும், பத்தாம் வகுப்பில் 24ம் இடம் என மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுனர்.