திருவாடானை - ஓரியூர் போக்குவரத்து கட்
திருவாடானை : தரைப்பாலத்தில் வெள்ள நீர் செல்வதால் திருவாடானை-ஓரியூர் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.திருவாடானையில் இருந்து பாண்டுகுடி, வெள்ளையபுரம் வழியாக ஓரியூர் ரோட்டில் நகரிகாத்தான் அருகே தரைப்பாலம் உள்ளது. மழையால் இப்பாலத்தில் வெள்ள நீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது. எட்டுகுடி கிராம மக்கள் கூறியதாவது:ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இந்த தரைப்பாலத்தில் மழை நீர் செல்வது வழக்கம். இதனால் போக்குவரத்து நிறுத்தப்படுவதும் வழக்கமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க திருவாடானைக்கு செல்ல வேண்டும். ஓரியூரில் பிரசித்தி பெற்ற அருளானந்தர் சர்ச் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் செல்வார்கள். போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சிரமம் அடைந்துள்ளனர்.ஓரியூர் மற்றும் திருவாடானையில் படிக்கும் மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. ஆண்டுதோறும் பாதிப்பு ஏற்படுவதால் இந்த தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட வேண்டும் என்று அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. வரும் காலங்களிலாவது பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.