பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் தடையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.1988ல் பாம்பன் கடலில் அமைத்த தேசிய நெடுஞ்சாலை பாலம் நடுவில் உள்ள இரும்பு பிளேட், துாண்கள் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இந்நிலையில் பாலத்தில் வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்ப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அதிக எடையால் பாலம் பலவீனமடையும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க பாலத்தில் வாகனம் நிறுத்த போலீசார் தடைவிதித்தனர்.சில நாட்களாக ராமேஸ்வரத்திற்கு வருவோர் பாம்பன் கடல் அலைகள், புதிய ரயில் பாலத்தை கண்டு ரசிக்க வாகனங்களை பாலத்தில் நிறுத்துகின்றனர். போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தினாலும், சிலர் கண்டுகொள்ளாமல் நிறுத்தி விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாலத்தில் கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும்.