ராமநாதபுரத்தில் போக்குவரத்து போலீசார் தவிப்பு: நெரிசலுக்கு தீர்வு காண முடியாத அவலம்
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ரோமன் சர்ச் வரையுள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் சொல்லி முடியாது. இந்த இடையூறுகளிலும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்களை சிரமப்பட்டு டிரைவர்கள் ஓட்டி வருகின்றனர்.இந்த பகுதிகளில் ரோட்டின் இரு புறங்களிலும் வணிக வளாகத்திற்கு செல்பவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இருக்கும் சிறிய ரோட்டில் இரு வாகனங்கள் எதிரே வந்தால் விலக கூட முடியாத நிலையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.அரசு மருத்துவமனை பகுதியில் பஸ் ஸ்டாப் இருப்பதால் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றும் போது பின்னால் வரும் வாகனங்கள் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எதிரில் வரும் வாகனங்கள் செல்ல வழியின்றி எதிர் எதிரே வாகனங்களின் போக்குவரத்து முற்றிலும் முடங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தப்பகுதியில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணாமல் உள்ளனர்.இரவு நேரங்களில் பழைய பஸ் ஸ்டாண்ட், எதிரில் ரயில் நிலையம் என்பதால் வாகனங்களில் அதிகளவில் பயணிக்கின்றனர். இதனை போக்குவரத்து போலீசார் பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து வரும் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக மெயின் ரோட்டில் செல்லும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதாக வாகனங்களை நிறுத்தி மேலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றனர். ராமநாதபுரம் நகரில் இருக்கும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க போக்குவரத்து போலீசார் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.