பரமக்குடியில் போலீஸ் ஸ்டேஷன் முன் தேங்கும் மழைநீரால் அவதி
பரமக்குடி : பரமக்குடி ஒருங்கிணைந்த போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மழை நீர் மாதக் கணக்கில் தேங்கி கழிவுநீராகி கொசு உற்பத்தி கேந்திரமாகியுள்ளது. பரமக்குடி டவுன் போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் ஒட்டுமொத்தமாக உடைக்கப்பட்டு புதிய கட்டடப் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் பரமக்குடி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் கீழ் தளத்திலும்,அனைத்து மகளிர் ஸ்டேஷன் மேல் தளத்தில் செயல்படுகிறது. தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கட்டப்பட்ட நிலையில் டவுன் ஸ்டேஷன் தற்காலிகமாக கீழ்தளத்தில் இயங்குகிறது. முதல் மாடியில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இதன்படி ஒரே வளாகத்தில் நான்கு போலீஸ் ஸ்டேஷன்கள் இயங்கும் நிலையில் நாள் முழுவதும் மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் 20க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ள நிலையில் 100 பேர் வரை சுழற்சி முறையில் இருக்கின்றனர். தொடர்ந்து ஸ்டேஷன் வளாகத்தில் ஒவ்வொரு முறை சிறு மழை பெய்யும் போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் போலீசார் சீருடையுடன் வரும் போது ஷூ உள்ளிட்டவை நனைந்து சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் தேங்கும் மழை நீர் கழிவு நீராக மாறி நாள் முழுவதும் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறி போலீசார் நோய் தொற்று பீதியில் இருக்கின்றனர். ஆகவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஸ்டேஷன் வளாகத்தில்கழிவு நீர் கடந்து செல்லும் வழியை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.