ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படாத வாகனங்களால் விபத்து அபாயம்
பரமக்குடி, : பரமக்குடி பகுதிகளில் பாரம் ஏற்றிய டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களின் பின்னால் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாததால் பின் தொடரும் வாகன ஓட்டிகள் விபத்து அபாயம் உள்ளது.மாவட்டம் முழுவதும் விவசாய மற்றும் கூலி தொழிலை பிரதானமாக கொண்டுள்ளனர். இதற்காக டிராக்டர்கள், மினி லாரிகள், சரக்கு வாகனங்கள், தண்ணீர் டேங்கர் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.விவசாய பயன்பாடு மற்றும் சீமைக்கருவேல மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல பயன்படுத்தும் வாகனங்களின் பின் பகுதிகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இருப்பதில்லை. குடிநீர் வாகனங்களின் பின்பகுதிகளிலும் இதே நிலை தான் உள்ளது.இதனால் பகல் நேரங்களில் மட்டுமல்லாது இரவு நேரங்களில் பின் தொடரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்களை அறிய முடியாமல் விபத்து அபாயம் உள்ளது. முக்கியமாக டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சம் குறைவாக உள்ளதால் முன் செல்லும் வாகனங்களின் மீது மோதும் நிலை ஏற்படுகிறது.எனவே போக்குவரத்து போலீசார் மற்றும் வாகன போக்குவரத்து அதிகாரிகள் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.