நெசவாளரின் குடும்ப தலைவிக்கு மகளிர் உரிமைத்தொகை வேண்டும் பரமக்குடியில் கோரிக்கை
பரமக்குடி : கைத்தறி நெசவு தொழில் செய்யும் நெசவாளரின் குடும்பத் தலைவிக்கு மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்படாமல் வழங்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜூன் 20 நெசவாளர் தினத்தையொட்டி ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பரமக்குடி எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் பிரசாரக் கூட்டம் நடந்தது. கைத்தறி சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜன், கவுரவ தலைவர் ராதா, மாவட்ட செயலாளர் பெருமாள், நிர்வாகி செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.அப்போது கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் 6000 ரூபாயாக உயர்த்த வேண்டும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள குடும்ப தலைவர் ஓய்வூதியம் பெறும் நிலையில், குடும்ப தலைவிக்கு மகளிர் உரிமைத் தொகையை மறுக்காமல் அரசு வழங்க வேண்டும். 11 ரக ஒதுக்கீடு அமல்படுத்துவதுடன், கைத்தறிக்கு ஜி.எஸ்.டி., யை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.மாவட்ட செயலாளர் சிவகுமார், துணைத் தலைவர்கள் ருக்மாங்கதன், லட்சுமி நாராயணன், பொருளாளர் நாகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.