முதல்வரால் திறக்கப்பட்ட அறிவு சார் மையம் செயல்படுவது எப்போது; போட்டித்தேர்வாளர்கள் எதிர்பார்ப்பு
பரமக்குடி: பரமக்குடியில் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த அறிவு சார் மைய நுால கத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என போட்டி தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பரமக்குடி மணி நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மைய நுாலகம் கட்ட 2023 ஏப்., மாதம் பூமி பூஜை செய்யப்பட்டது. இங்கு சிறுவர்களுக்கு என பிரத்தியேகமாக நவீன வாசிப்பு அறை, பொது வாசிப்பு அறை, இலவச வைபை வசதி, ஆன்லைன் நுாலகம், கணினி அறை, மாற்று திறனாளி களுக்கான வசதிகள் மற்றும் கழிப்பறை என கட்டப் பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் முறையில் புத்தகங்கள் மற்றும் பொது அறிவு தகவல்கள் திரட்டும் வகையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நுாலகப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது குறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது. தொடர்ந்து கடந்த வாரம் அக்.,3 அன்று முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் நடந்த விழாவில் நுாலகத்தை திறந்து வைத்தார். ஆனால் தற்போது வரை எந்த வகையான செயல்பாடும் இன்றி பூட்டியே வைக்கப் பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வு தயாராகும் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். ஆகவே திறப்பு விழா செய்யப்பட்ட நுாலகத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.