மழை பெய்யுமா: திருவாடானை பகுதியில் விவசாயிகள் கவலை
திருவாடானை; மழை பெய்யாததால் திருவாடானை தாலுகாவில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது. உழவுப் பணிகள் முடிந்து விதைத்துள்ளனர். மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இது குறித்து குளத்துார் விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு விதைக்கும் போது போதிய மழையின்றி நெல் விதைகள் பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் விதைத்தோம். இந்த ஆண்டு விதைத்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. மழை இல்லாமல் விதைகள் முளைக்கவில்லை. மழை பெய்ய வேண்டிய நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. காற்றும் பலமாக வீசுகிறது. இன்னும் சில நாட்களுக்குள் மழை பெய்யவில்லை என்றால் விதைகள் முளைப்பு தன்மையை இழந்துவிடும் என்றனர்.