ரோப்கார் வளாகத்தில் அலைமோதிய பக்தர்கள்
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, யோக நரசிம்ம சுவாமி கோவில். 1,305 படிகள் கொண்ட இந்த மலைக்கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்று.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்கதர்கள், சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக, ஆறு மாதங்களாக ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது.தினமும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், இந்த சேவை வாயிலாக சுவாமி தரிசனம் செய்கின்றனர். வழக்கமாக, காலை 9:00 மணிக்கு துவங்கும் ரோப் கார் சேவை, தற்போது புரட்டாசி மாதத்தையொட்டி, வார இறுதி நாட்களில், காலை 6:00 மணி முதல் இயங்கி வருகிறது. தற்போது, பள்ளி காலாண்டு விடுமுறையின் கடைசி நாளான நேற்று, ரோப்கார் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல வரிசையில் காத்திருந்து பயணித்தனர்.அதேபோல், உற்சவர் சுவாமி அமைந்துள்ள சோளிங்கர் பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். நவராத்திரியை ஒட்டி, மாலை 6:00 மணிக்கு, அமிர்த வல்லி உடனுறை பக்தோசித பெருமாள் உள்புறப்பாடு எழுந்தருளினார்.