சீரமைக்கப்படும் குளக்கரையை ஆக்கிரமிக்கும் தள்ளுவண்டிகள்
சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்டது பில்லாஞ்சி கிராமம். இங்கு, 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பில்லாஞ்சியில் இருந்து ஸ்ரீகாளிகாபுரம் சாலை மற்றும் ஆர்.கே.பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை இணையும் கூட்டு சாலையில் குளம் அமைந்துள்ளது. குளக்கைரையை ஒட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலை மிகவும் சிக்கலான வளைவுகளுடன் அமைந்துள்ளதால், இந்த பகுதியில் ஏராளமான விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. கடந்தாண்டு, இச்சாலை வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது.அதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வேகத்தடையும், எல்.இ.டி., எச்சரிக்கை சிக்னலும் பொருத்தப்பட்டது. இந்த குளக்கரையில் இருந்த பாழடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியும்படியாக, குளக்கரையில் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. தற்போது, இக்குளக்கரையில் தள்ளுவண்டிகள் ஆக்கிரமிக்க துவங்கியுள்ளன.இதனால், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.