துாய்மை மேற்பார்வையாளரிடம் சீண்டல்மருத்துவமனையில் 3 பேர் குழு விசாரணை
துாய்மை மேற்பார்வையாளரிடம் 'சீண்டல்'மருத்துவமனையில் 3 பேர் குழு விசாரணைசேலம்:சேலம் அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் துாய்மைப்பணி மேற்கொள்கிறது. இதில் சேலம், சின்னத்திருப்பதியை சேர்ந்த, 30 வயது பெண், துாய்மைப்பணி மேற்பார்வையாளராக, 460 ரூபாய் கூலிக்கு பணியாற்றினார். கடந்த டிச., 26ல் பணியில் இருந்து நின்றார். அப்பெண், கடந்த பிப்., 4ல், மருத்துவ கல்லுாரி டீன் தேவிமீனாளிடம் புகார் அளித்தார். அதேபோல் கலெக்டர் முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை புகார் சென்றது. அதில் ஒப்பந்த நிறுவன முக்கிய நிர்வாகி உள்பட, 3 பேர், பாலியல் கொடுமை செய்ததாக தெரிவித்திருந்தார்.இதனால் சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை விசாகா கமிட்டி சேர்மன் மணிமேகலை, 'சம்மன்' அனுப்பி, நேற்று முன்தினம், அந்த பெண்ணிடம், டீன் அலுவலகம் எதிரே தனி அறையில் விசாரித்தார். அதேபோல் கமிட்டி குழுவினரான, இணை பேராசிரியர்கள் முகமது இலியாஸ் ரகமத்துல்லா, அருள்குமரன், அப்பெண்ணிடம் தனித்தனியே விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தனர். பின் பெண் வழங்கிய ஆதாரங்களை இணைத்து, விசாரணை அறிக்கை, டீன் மூலம், தமிழக மருத்துவ கல்லுாரி இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், 'மருத்துவமனை போலீசார், ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்னை தீர்ந்திருக்கும். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தற்போது சில ஊழியர்கள், கேலி, கிண்டல் செய்து, வாட்ஸாப் குழுவில் வன்மத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த, 8ல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விசாரணையை அடுத்து, தற்போது மருத்துவமனையில் நடந்தது' என்றார்.