உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காணிக்கை திருட்டு வழக்கு: ஏ.சி., முன்ஜாமின் தள்ளுபடி

காணிக்கை திருட்டு வழக்கு: ஏ.சி., முன்ஜாமின் தள்ளுபடி

சேலம், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒருக்காமலை வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலை கடந்த மார்ச், 17ல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.அப்பணிக்கு, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் அம்சா மேற்பார்வை அதிகாரியாக செயல்பட்டார். அதில், 12.38 லட்சம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டு வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உண்டியல் திறப்பின்போது அம்சா பணம் திருடியதாக கூறி, கோவில் நிர்வாகம் சார்பில், கண்காணிப்பு கேமரா பதிவுகளுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சங்ககிரி போலீசார், அம்சா மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் கைதாவதை தவிர்க்க, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு, அம்சா மனுதாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை கடந்த, 15ல் நடந்தது.அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, கேமரா பதிவு ஆதாரங்களையும், ஏற்கனவே அம்சா மீது வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் நகை திருட்டு விவகாரத்தில், சூரமங்கலம் போலீசில் வழக்கு பதிவாகி முன்ஜாமின் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அம்சாவின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ