நவீன எரிவாயு தகன மேடை பணி முடிந்து 7 மாதமாகியும் பயன்பாட்டுக்கு வராத அவலம்
ஆத்துார், ''எரிவாயு தகன மேடை கட்டப்பட்டு, 7 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராததால், ஆத்துாருக்கு கொண்டு சென்று உடல்களை தகனம் செய்யும் நிலை உள்ளது,'' என, தி.மு.க., கவுன்சிலர் ஜோதி குற்றம்சாட்டினார்.சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம்:தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ்: பிள்ளையார் கோவில் தெருவில் உயர்கோபுர மின்விளக்கு, 2 ஆண்டாக எரியவில்லை.கமிஷனர் ஜீவிதா: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., கவுன்சிலர் கோபி: நகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு 'போலி' பில் போடுவதாக புகார் எழுந்துள்ளது.கமிஷனர் ஜீவிதா: ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., கவுன்சிலர் ஜோதி: அணைமேடு பகுதியொட்டி, 2022 - 23ல், 1.50 கோடி ரூபாயில், நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட்டது. பணி முடிந்து, 7 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் ஆத்துாருக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் நிலை உள்ளது.கமிஷனர் ஜீவிதா: இதற்கான பணியை விரைவில் மேற்கொள்ள உள்ளதாக, உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.