உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு 2 பிரிவினர் பிரச்னையை தவிர்க்க போலீஸ் குவிப்பு

மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு 2 பிரிவினர் பிரச்னையை தவிர்க்க போலீஸ் குவிப்பு

ஓமலுார் :மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு எழுந்ததால், இரு பிரிவினர் இடையே பிரச்னையை தவிர்க்க, போலீசார் குவிக்கப்பட்டனர்.நங்கவள்ளி அருகே வனவாசி புதுப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் உசேன். இவர் பல ஆண்டுக்கு முன் இறந்த நிலையில், அவரது உடலை, உறவினர்கள், வனவாசியில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்தனர். நேற்று முன்தினம், அப்துல் உசேன் மனைவி ரஜாப்பி, 80, இறந்தார்.அவரது உடலை, கணவரை அடக்கம் செய்த இடத்தில் புதைக்க ஏற்பாடு செய்தபோது, அந்த இடம் தற்போது குமார் என்பவரது பட்டா இடத்தில் உள்ளது என்றும், யாரும் அடக்கம் செய்யக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.இரு மதத்தினர் இடையே பிரச்னை ஏற்படக்கூடாது என, மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம், டி.எஸ்.பி., சஞ்சீவிகுமார் உள்பட, 50-க்கும் மேற்பட்ட போலீசார், சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரு தரப்பை அழைத்து நங்கவள்ளி ஸ்டேஷனில் பேச்சு நடத்தினர். அதில் வனவாசியில் முஸ்லிம்களுக்கு தனியே சுடுகாடு வசதிக்கு நடவடிக்கை எடுக்கவும், தற்போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பொது இடம் உள்ளதா என அளவீடு செய்து முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.மேலும் இறந்த ரஜாப்பியை, நங்கவள்ளி தோப்புத்தெருவில் உள்ள முஸ்லிம் சமுதாயத்துக்கு சம்பந்தப்பட்ட சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !