எதிர்ப்புக்கு இடையே ஆக்கிரமிப்பு அகற்றம்
பனமரத்துப்பட்டி, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையின், மேற்கு பகுதி சர்வீஸ் சாலையில் நாழிக்கல்பட்டி பிரிவு உள்ளது. அங்கு நெடுஞ்சாலை துறை நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று, அதிகாரிகள் ஈடுபட்டனர். அதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நெடுஞ்சாலைத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மல்லுார் போலீசார், பேச்சு நடத்தினர்.அப்போது, 'சீலநாயக்கன்பட்டி முதல் பனமரத்துப்பட்டி பிரிவு வரை, நெடுஞ்சாலை நிலத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்றாமல், இங்கு மட்டும் அகற்ற காரணம் என்ன' என, மக்கள் கேள்வி எழுப்பினர்.அதிகாரிகள், 'நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது' என்றனர். பின் மக்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் ஏற்கனவே அவகாசம் கொடுக்கப்பட்டதாக கூறி, போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர், ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, 6 கடைகள் முன் படிக்கட்டுகள், சிமெண்ட் அட்டைகள், விளம்பர போர்டுகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.