உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முன்னாள் அமைச்சரை விமர்சித்த விவகாரம் சேலம் அ.தி.மு.க.,பிரமுகருக்கு மீண்டும் சம்மன்

முன்னாள் அமைச்சரை விமர்சித்த விவகாரம் சேலம் அ.தி.மு.க.,பிரமுகருக்கு மீண்டும் சம்மன்

பனமரத்துப்பட்டி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை விமர்சித்த விவகாரத்தில், சேலம் அ.தி.மு.க., பிரமுகர் வக்கீல் மணிகண்டனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சேலம், அ.தி.மு.க.,வை சேர்ந்த வக்கீல் மணிகண்டன்,50; இ.பி.எஸ்.,ஆதரவாளர். இவர் கடந்த மாதம், 9ல், 'டிவி' நிகழ்ச்சியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை விமர்சித்து பேசினார். ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்த செங்கோட்டையன் ஆதரவாளர் சத்தியசீலன், வக்கீல் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.இது சம்மந்தமான விசாரணைக்கு கடந்த செப்.,30ல், நேரில் ஆஜராக மணிகண்டனுக்கு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பினர். நேரில் ஆஜராக வரும் போது, என் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். பாதுகாப்பு அளித்தால், விசாரணைக்கு நேரில் வருகிறேன் என, ஈரோடு போலீசாருக்கு, மணிகண்டன் கடிதம் அனுப்பினார். இதனால் கடந்த, 30ல், விசாரணைக்கு மணிகண்டன் ஆஜராகவில்லை.இந்நிலையில், ஈரோடு கூடுதல் எஸ்.பி.,யிடம் வரும், 14ல், தகுந்த ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என, இரண்டாம் முறையாக மணிகண்டனுக்கு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.நேற்று, ஈரோடு கூடுதல் எஸ்.பி.,க்கு தபால் மூலம் மணிகண்டன் அனுப்பிய கடிதத்தின் விபரம்: செங்கோட்டையன் ஆதரவாளர்களிடம் இருந்து எவ்வித அச்சுறுத்தல், தாக்குதல் நடக்காமல் பாதுகாப்பு வழங்கினால், உரிய தேதியில் ஆஜராகிறேன். இயலாத பட்சத்தில், எனக்கு உரிய விசாரணை கேள்வி பட்டியலை அனுப்பினால், எழுத்துப்பூர்வமாக பதில் தர கடமை பட்டிருக்கிறேன். அல்லது தாங்கள் கூறும் தேதியில் எனது பாதுகாப்பு கருதி, சேலம்எஸ்.பி., அலுவலகத்தில் ஆஜராகிறேன். அப்போது என்னிடம் விசாரணை நடத்தலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி