எச்சில் பாட்டிலை வாங்க மாட்டோம் டாஸ்மாக் சங்கம் ஆர்ப்பாட்டம்
பனமரத்துப்பட்டி, சந்தியூரில் உள்ள சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன், அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.பட்டதாரி உடை அணிந்து, மதுபாட்டில்களை கழுத்தில் அணிந்தபடி, 'பட்டதாரிகளான நாங்கள் எச்சில் காலி மது பாட்டில்களை திரும்ப வாங்க மாட்டோம்' என, கோஷமிட்டனர்.இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: காலி மதுபாட்டிலில், எச்சில் துப்பி, சிகரெட் சாம்பல் போட்டு தருகின்றனர். தொற்று நோய் தாக்கும் ஆபத்து உள்ளது. அதனால் எச்சில் பாட்டில்களை வாங்க மாட்டோம். காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில், ஸ்டிக்கர் ஒட்டவும், பாட்டில்களை சேகரிக்கும் பணியை ஊழியர்கள் மீது திணிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்ந்து பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட மேலாளரிடம் மனு அளித்தனர். மாவட்ட தலைவர்களான, டாஸ்மாக் தொ.மு.ச., ஜம்பு, அண்ணா தொழிற்சங்கம் செந்தில்குமார், சி.ஐ.டி.யு., உள்பட, 11 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.