இளம்பெண்ணை கடத்தி 2ம் திருமணம் செய்த வி.ஏ.ஓ.,
ஆத்துார்; இளம்பெண்ணை கடத்தி இரண்டாவது திருமணம் செய்த வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை கோரி பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த தெற்குகாடு பாலாஜி நகரை சேர்ந்த தம்பதி முருகன் - விஜயலட்சுமி. இவர்கள், நேற்று மனு கொடுக்க, கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது, விஜயலட்சுமி, திடீரென வளாகத்தில் உருண்டு கண்ணீர்விட்டு கதறினார்.போலீசார் சமாதானம் செய்தபின், மனு அளித்த அவர் கூறியதாவது:என் மூன்றாவது மகள் சுஸ்மிதா, 22; பி.இ., பட்டதாரி. ஓமலுார் அடுத்த தும்பிபாடி வி.ஏ.ஓ., வினோத்குமார், 38, என்பவர், என் மகளை கடத்தி திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே, சத்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், என் மகளை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.மகளை தேடி சென்றபோது, ஓமலுார் வட்ட வி.ஏ.ஓ., சங்க தலைவர் திரவிய கண்ணன், வினோத்குமாருக்கு ஆதரவாக எங்களை மிரட்டினார். என் மகளை மீட்டு தருவதுடன், கடத்திய வி.ஏ.ஓ., அவருக்கு உடந்தையாக இருக்கும் சங்க தலைவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.