இலவச மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும் விவசாய பயன்பாட்டிற்காக இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்தாண்டு இலவச மின்சாரத்திற்காக தமிழக அரசு ஏழாயிரத்து 280 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக இணைப்பு வழங்கினாலும் பல இடங்களில் பம்ப்செட், கிணறுகள் பயன்பாடின்றி உள்ளது.இலவச மின் இணைப்பை சிலர் முறைகேடாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே விவசாய இலவச மின் இணைப்புகளை அந்தந்த பகுதி வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.திருப்புவனம் தாலுகாவில் 92 கிராமங்களில் நான்காயிரத்து 406 விவசாய இலவச மின் இணைப்புகள் உள்ளன. இவற்றை திருப்புவனம் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மின் இணைப்பு எண், விவசாயி பெயர், கிணறு உள்ள சர்வே எண், நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர், தினசரி மோட்டார் எத்தனை மணி நேரம் இயக்கப்படுகிறது என கணக்கெடுத்து வருகின்றனர்.60 சதவிகித இணைப்புகளை ஆய்வு செய்துள்ள அதிகாரிகள் இதுகுறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்ப உள்ளனர்.இதில் பயன்பாடில்லாத விவசாய இணைப்புகள், விவசாயம் அல்லாத பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இணைப்புகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட உள்ளது.விவசாயிகள் தரப்பில் கூறுகையில்: தொடர்ச்சியாக விவசாயம் செய்ய முடியாது, தண்ணீர் கிணற்றில் இருப்பை பொறுத்து தான் விவசாயம் செய்ய முடியும், வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவித்தாலும் திருப்புவனம் வட்டாரத்தில் மழையே இல்லை. கண்மாய்களிலும் தண்ணீர் இல்லை.கண்மாயில் தண்ணீர் இருந்தால் தான் அதனை சுற்றியுள்ள விவசாய கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து விவசாய பணிகளை மேற்கொள்ள இயலும், ஆனால் அதிகாரிகள் விவசாய பணிகள் இல்லாத காலங்களில் கணக்கெடுப்பதால் இலவச மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு என்றனர்.