அரசு மருத்துவமனையில் சினைப்பை கட்டி அகற்றம்
சிவகங்கை: காளையார்கோவில் அருகேயுள்ள சாக்கூர் துரைராஜ் மனைவி சரசு 75. இவர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக வயிற்றில் கட்டி மற்றும் வலியுடன் அவதிக்குள்ளாகி மகப்பேறு மற்றும் மகளிர் நல பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.அவர் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதும் சினைப்பையில் தற்போது பெரிய கட்டி இருப்பதும் கண்டறியப்பட்டது.அவருக்கு மகப்பேறு மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சேர்ந்து ஏழரை கிலோ சினைப்பை கட்டியை அகற்றினர்.திருப்புத்துார் கருப்பூர் பாண்டி மனைவி சுமதி 43 கர்ப்பப்பை நீர்ப்பை மற்றும் மலக்குடல் இறக்கத்துடன் சிகிச்சைக்காக சேர்ந்தார்.அவருக்கு மனச்சிதைவு நோய் இருப்பதை அறிந்து மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு மனநல டாக்டர் உதவியுடன் மலக்குடல் இறக்கத்திற்கு அறுவை சிகிச்சை நிபுணர் பரிசீலனையுடன் முதல்வர் மருத்துவ காப்பீட்டின் கீழ் கர்ப்பப்பையை அகற்றினர்.பிப்.22ல் காரைக்குடி 35 வயது பெண் வயிற்று வலியுடன் மகப்பேறு மகளிர் நல பிரிவில் உள்நோயாளியாக சேர்ந்தார். ஸ்கேன் செய்ததில் அவர் கர்ப்பமாக உள்ளார் என்பதையும் அவருக்கு இரண்டு கரு உருவாகி அதில் ஒன்று கர்ப்பப்பையிலும் மற்றொன்று கருமுட்டைக் குழாயிலும் தனித்தனியே வெவ்வேறு இடத்தில் கருததரித்திருந்தும் தெரிய வந்தது.குழாயில் தரித்த கரு வளர்ந்து குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு நவீன லேப்ராஸ்கோபி முறையில் மகளிர் நல டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இந்த அறுவை சிகிச்சைகளை செய்த மகப்பேறு மற்றும் மகளிர் நல பிரிவு துறை தலைவர் டாக்டர் நாகசுதா, டாக்டர் தென்னரசி, மயக்கவியல் பிரிவு டாக்டர் வேல்முருகன், அறுவை சிகிச்சை டாக்டர் கங்கா, மனநல பிரிவு டாக்டர் ராஜசுந்தரி, உதவி பேராசிரியர்கள், செவிலியர்களை கல்லுாரி முதல்வர் சத்யபாமா பாராட்டினர். உதவி நிலைய மருத்துவர் முகமதுரபி உடன் இருந்தார்.