கண்மாய்களில் அள்ளப்படும் வண்டல் மண்: அதிகாரிகள் கவனிக்காததால் விவசாயிகள் கவலை
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் பொதுப் பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள பல கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயிகள் தங்கள் நிலங்களை மேம்படுத்தி உயர்த்திக்கொள்ளும் பொருட்டு கடந்த ஆட்சியில் மாநிலம் முழுவதும் குடி மராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது அதே போல் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதித்துள்ளது. இதை தவறாக பயன்படுத்தி பலர் மண்ணை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமங்களில் உள்ள கண்மாய்களில் அப்பகுதியிலுள்ள சிலரின் பெயரை பதிவு செய்துகொண்டு, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண்ணை அள்ளி வருகின்றனர். இப்பகுதி கண்மாய்களில் செங்கல் சூளை உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் கிராவல் மண் அதிக அளவில் காணப்படுகிறது. அவற்றை எடுத்து ஒரு லோடு 6000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை தூரத்துக்கு ஏற்ப விற்கிறார்கள். சாதாரண மண்ணை ரியல் எஸ்டேட் நிலங்களுக்கு அனுப்பி விடுகின்றனர். இதனால் திட்டத்தின் நோக்கம் பாழாகி, கண்மாய்களும் பாதிக்கப்படுகிறது. வணிக நோக்கில் மண் எடுப்பவர்கள் வரைமுறை இல்லாமல் கண்மாய்களை குதறி எடுத்து கூடுதலாக வெட்டி எடுப்பதால் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி முழு தண்ணீரும் விவசாயத்திற்கு பயன்பட முடியாத சூழல் ஏற்படும். இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மண் கடத்தப்படுவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதே நிலை நீடித்தால் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பேரழிவை சந்திக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே எந்தெந்த கண்மாய்களில் எவ்வளவு மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது, பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் தோட்டம் நிலங்களுக்கு தான் அந்த மண் சென்றதா என்பதை ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.