உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொந்தகையிலும் திறந்த வெளி அருங்காட்சியகம்

கொந்தகையிலும் திறந்த வெளி அருங்காட்சியகம்

கீழடி: கீழடி திறந்த வெளி அருங்காட்சியகப் பணிகளுடன் கொந்தகை அகழாய்வு தளத்தையும் பொதுமக்கள் காணும் வகையில் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. கீழடியுடன் அகரம், கொந்தகை, மணலுார் ஆகிய இடங்களில் 2019 முதல் அகழாய்வு பணிகள் நடந்தன. இதில் மணலுார், அகரம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. கீழடி, கொந்தகையில் மட்டும் பணிகள் நடந்தன. கொந்தகையை பண்டைய கால மக்கள் ஈமக்காடாக பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது. கொந்தகையில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன. தாழிகளினுள் நெல்மணிகள், சூது பவளங்கள், இரும்பு ஆயுதங்கள், சுடுமண் பொருட்கள் என ஏராளமானவை எடுக்கப்பட்டன. ஒரு சில தாழிகள் மட்டும் கீழடி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. மீதியுள்ள தாழிகள் அப்படியே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கொந்தகை அகழாய்வு தளத்தைச் சுற்றிலும் கண்மாய், ஊருணி, விவசாய நிலங்கள் இருப்பதால் மழை காலங்களில் அகழாய்வு குழிகளில் தண்ணீர் தேங்கி தாழிகள் சேதமடைந்து வருகின்றன. எனவே முதுமக்கள் தாழிகளை பாதுகாக்கும் பொருட்டு 10 அடி ஆழத்தில், 430 அடி நீளத்தில் அகழாய்வு தளத்தைச் சுற்றிலும் கான்கிரீட் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் வெளி ஊற்றுகளில் இருந்து தண்ணீர் வருவது தடுக்கப்பட்டு, முதுமக்கள் தாழிகள் பாதுகாப்பாக இருக்கும். ஜனவரியில் கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் போது கொந்தகை திறந்த வெளி அருங்காட்சியகத்திற்கும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். முதுமக்கள் தாழிகள், சுடுமண் கிண்ணங்கள் உள்ளிட்டவற்றையும் அருகில் சென்று பார்வையிடலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை