மாணவர்களுக்கு சாலை விதிகள் விழிப்புணர்வு.... அவசியம்: சாலை, தீ விபத்துக்களில் தப்பிக்க முகாம்
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம், அவசர கால பயிற்சிகள் வழங்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.அரசு பள்ளிகளில் கிராமப்புற ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரின் குழந்தைகள் அதிகளவில் கல்வி பயில்கின்றனர். வீடுகளில் இருந்து கிளம்பி பள்ளி வந்து மாலையில் வீடு திரும்புகின்றனர். பெரும்பாலான மாணவ, மாணவியர்கள் தினசரி 30 கி.மீ., தூரம் வரை பயணம் செய்கின்றனர். சாலைகளை கடப்பது, விதிகளை பின்பற்றுவது, விபத்து போன்றவற்றில் முதல் உதவி சிகிச்சை செய்வது, தீ விபத்து காலங்களில் உயிர் தப்புவது போன்ற அடிப்படை விஷயங்கள் எதுவுமே தெரியாமலேயே உள்ளனர். பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வாரம், சுற்றுச்சூழல் வாரம் உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த துறை அதிகாரிகள் பெயரளவில் ஊர்வலம், விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவற்றை நடத்துகின்றனர். இதனால் மாணவ, மாணவியர்களுக்கு எந்த பயனும் இல்லை. திருப்புவனம் வட்டாரத்தில் 65 தொடக்க, 35 நடுநிலைப்பள்ளிகளில் இரண்டாயிரத்து 451 மாணவர்களும், இரண்டாயிரத்து 523 மாணவிகளும் கல்வி பயில்கின்றனர். இதுதவிர திருப்புவனம் வட்டாரத்தில் எட்டு அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. திருப்புவனம் பெண்கள் பள்ளியில் இரண்டாயிரம் மாணவிகளும், ஆண்கள் பள்ளியில் 853 மாணவர்களும் கல்வி பயில்கின்றனர். மாணவ, மாணவியர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறி விட்டனரா, சாலைகளை கடந்து விட்டனரா என கண்டு கொள்வதே இல்லை. கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதையை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்திற்குள்ளானது. சாலை விதிகளை கடைபிடிக்காததால் தான் விபத்து நேரிட்டது. எனவே அடிப்படை சாலை விதிகள், தீ விபத்து காலங்கள் குறித்து பள்ளி அளவிலேயே சிறப்பு பயிற்சி முகாம்கள் மூலம் கற்று கொடுக்க வேண்டும். அந்தந்த துறை அதிகாரிகளை வரவழைத்து பயிற்சி முகாம்கள் வழங்குவதன் மூலம் விபத்து காலங்களில் உயிரிழப்புகளை தடுக்கலாம்.இது குறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறியதாவது, பள்ளிகளில் குறிப்பிட்ட காலங்களில் ஒருசில மாணவ, மாணவியர்களை மட்டும் அழைத்து பேரணி நடத்தி முடிக்கின்றனர். சாலை விதிகள் குறித்து முழுமையாக அவர்கள் தெரிந்து கொள்வதே இல்லை. பள்ளிகளில் முதல் உதவி பெட்டிகள், அதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதும் இல்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.