திருப்புவனத்தில் டூவீலரில் பறக்கும் சிறுவர்கள்: பெற்றோர் அலட்சியம்
திருப்புவனம்: திருப்புவனத்தில் தினசரி தடையை மீறி சிறுவர், சிறுமியர் டூவீலரில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து நேரிட்டு வருகின்றன. திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதுதவிர சுற்றுவட்டார கிராம மக்களும் தங்களது தேவைகளுக்கு திருப்புவனம் வந்து செல்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் டூவீலர்கள் வைத்துள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் டூவீலர் இயக்க உரிமம் பெற்ற பின் ஹெல்மெட் அணிந்து இயக்க வேண் டும், ஆனால் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சிறுவர், சிறுமியர் பலரும் விதிகளை மீறி டூவீலரில் வேகமாக செல்கின்றனர். டூவீலரில் சக நண்பர்கள் மூன்று முதல் ஐந்து பேர் வரை ஏற்றிச் செல்கின்றனர். உரிமம் பெறாமல் சிறுவர்கள் இயக்கினால் டூவீலர்கள் பறிமுதல் செய்வதுடன் வாகன உரிமையாளர், பெற்றோர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்தும் பெற்றோர் கண்டு கொள்வதில்லை. உரிமம் பெறாத சிறுவர்கள் ஆர்வமிகுதியால் அதி வேகத்தில் சாலையின் தன்மை அறியாமல் செல்கின்றனர். விபத்து நேரிட்டால் வழக்கு பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டுவதால் சிறுவர், சிறுமியர்கள் டூவீலர்களை ஓட்டுவது அதிகரித்து வருகிறது. திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தில் 16 வயது சிறுவன் ஓட்டிய டூவீலரால் ஆறு வயது சிறுமி உயிரிழந்தார். இதுபோன்ற நேரங்களில் மட்டும் போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். மற்ற சமயங்களில் நடவடிக்கை எடுப்பதில்லை.