உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எக்டேருக்கு ரூ.1500ல் உயிர் உரங்கள் கலெக்டர் பொற்கொடி தகவல்  

எக்டேருக்கு ரூ.1500ல் உயிர் உரங்கள் கலெக்டர் பொற்கொடி தகவல்  

சிவகங்கை: தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் எக்டேருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிர் உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுவதாக கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, உணவு பொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலப்பதால் மக்களின் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான பூச்சிகளின் வளர்ச்சி மற்றும் பரவலை தொடர்ந்து கண்காணிப்பது, பூச்சிகளை உண்ணும் பூச்சிகள் அல்லது ஒட்டுண்ணிகளை பயன்படுத்துதல், பயிர் சுழற்சி கலப்பின பயிர்கள், நிலத்தின் தயாரிப்பு போன்ற விவசாய நடைமுறைகள், பூச்சி பொறிகள், கைகளால் பூச்சிகளை அகற்றுதல், பூச்சி எதிர்ப்பு பயிர்களை நடவு செய்தல், விதை நேர்த்தி செய்தல், போன்றவற்றை பின்பற்றுவது நல்லது. பூச்சி கொல்லிகளின் நச்சு தன்மை அளவினை அடையாளம் காண்பதற்காக சிவப்பு முத்திரை- மிகவும் நச்ச, மஞ்சள் முத்திரை - அதிக நச்சு, நீல முத்திரை - மிதமான நச்ச, பச்சை முத்திரை - சற்று நச்சு என முத்திரைகள் ஒட்டப்படுகிறது. பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ் ஒரு எக்டேருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிர் உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து உபயோகிப்பின் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை கையாள வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ