ரோட்டில் திரியும் மாடுகள்: தொடரும் விபத்துகள்
தேவகோட்டை : தேவகோட்டை நகரிலும், கண்டதேவி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் ரோட்டில் திரிகின்றன. பகலில் மேய்ந்தவுடன் இரவில் ரோடுகளில் கும்பல் கும்பலாக நிற்கின்றன. சில நடுரோட்டிலேயே படுத்துக் கொள்கின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இருளில் இரண்டு விபத்துக்களில் மாடுகள் உயிரிழந்தன. நகருக்குள்ளும் அனைத்து வீதிகளிலும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. மாடுகளுக்குள் மோதிக் கொண்டு வாகனங்களில் விழுவது வாடிக்கையாகி வருகிறது. நகரில் மட்டும் மூன்று கார்கள் சேதமடைந்து உள்ளது. கிராமங்களில் பயிர்களை அழித்து விடுகின்றன. விவசாயமும் பாதிக்கிறது. கலெக்டர் கவனம் செலுத்தி சிறுவாச்சி ரோட்டில் சித்தானுார் குறுக்கு சாலை கோசாலையை புதுப்பித்து போதிய பணியாளர்களை நியமித்து ரோட்டில் திரியும் மாடுகளை அடைத்து பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.