அவலம்: ரோடு, குடிநீர் அடிப்படை வசதி இல்லாத குடும்பமாக ஊரை காலி செய்யும் கிராமம்
தேவகோட்டை ஒன்றியம் திருவேகம்புத்துார் ஊராட்சியில் உள்ளது களத்துார் கிராமம். திருவேகம்புத்துாரில் இருந்து 4 கி.மீ. துாரத்தில் இருக்கிறது. இக்கிராமத்தில் 85 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இப்போது இந்த கிராமமே கவனிப்பாரின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாததால் ஒவ்வொரு குடும்பமாக ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர்.தேவகோட்டையில் 30 குடும்பமும், காரைக்குடியில் 35 குடும்பத்தினரும் வசிக்கின்றனர். தற்போது வெறும் 20 குடும்பத்தினர் மட்டுமே வசிக்கின்றனர். பல வீடுகள் பூட்டி கிடக்கிறது.25 வருடங்களுக்கு முன் 4 கி.மீ. துாரத்திற்கு ஜல்லிகளால் கிராவல் ரோடு அமைத்தனர். தற்போது பெயர்ந்து மோசமான நிலையில் நடக்க கூட முடியாத நிலையில் உள்ளது.எதற்கெடுத்தாலும் திருவேகம்பத்துார் தான் செல்ல வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளி செல்வதை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. மாணவிகள் சிலர் சைக்கிளில் செல்வதும் பாதி நாள் பஞ்சர் ஆவதுமாக உள்ளது.குடிநீர் திருவேகம்பத்தூர், ரவியமங்களம் பகுதியில் இருந்து வந்தது. அந்த தண்ணீரும் சரியாக வராததால் களத்துார் எல்லையில் மேல்நிலை தொட்டி கட்டி, தற்போது அதுவும் பயனில்லை. மக்களே துார்வாரிய ஊருணி தண்ணீரை பயன்படுத்து கின்றனர்.மின் கம்பங்கள் வயலில் சாய்ந்து நிற்கின்றன. மின்சாரம் போனாலும் அதிகாரிகளுக்கு தெரிவித்து சரி செய்வதற்குள் ஒரு நாள் ஆகி விடும்.அடிப்படை பிரச்னைக்காக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை என மக்கள் குமுறுகின்றனர். சந்திரா கூறியது: அடிப்படை வசதி இல்லை. 25 வருஷத்துக்கு முன்னாடி அமைத்த ரோடு. நடக்க முடியல... அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் வராது. களத்தூருக்கு என்றால் ஆட்டோ கூட வரமாட்டார்கள். குடிநீர் எப்போதாவது தான் வரும். தண்ணீர் தொட்டி இருந்தும் பலனில்லை. ஊரணி தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறோம். தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக வீட்டை போட்டு விட்டு வேறு ஊர்களுக்கு சென்று கஷ்டப்படுகின்றனர். கலெக்டர், அதிகாரிகள் ரோட்டை பார்த்து புது ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.