போக்குவரத்து போலீசாருக்கு பணி நேரம் நீட்டிப்பு
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் இரவு பத்து மணி வரை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.மானாமதுரை கோட்டத்தில் மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர்.மானாமதுரை கோட்டத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., தலைமையில் 13 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். போக்குவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இன்றி போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் திருப்புவனம், மானாமதுரையில் மட்டும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காலை எட்டு மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பார்கள், சமீபத்தில் மாவட்ட எஸ்.பி., இரவு பத்து மணி வரை போக்குவரத்து போலீசார் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதால் மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்புவனத்தில் ஆண்கள், பெண்கள் பள்ளி, தனியார் பள்ளி உள்ளிட்டவற்றில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வந்து கல்வி பயில்கின்றனர். மாலை நான்கு மணிக்கு பள்ளி முடிந்ததும் ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேறும் போது போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். இதுவரை போக்குவரத்து போலீசார் இருந்து போக்குவரத்தை சரி செய்தனர். மாவட்ட எஸ்.பி.,யின் உத்தரவால் மாலை நேரத்தில் போலீசார் இன்றி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் போக்குவரத்தில் பணியாற்றும் போலீசார் பலரும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர். இரவு பத்து மணிக்கு பணி முடிந்து சொந்த ஊர் செல்ல பஸ் வசதி இன்றி தவித்து வருகின்றனர். திருப்புவனத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க பொதுக்கழிப்பறை, சுகாதார வளாகம் என எதுவுமே இல்லை. போக்குவரத்து போலீசார் தொடர்ச்சியாக ஐந்து மணி நேரம் ரோட்டிலேயே நிற்க வேண்டியுள்ளது. அவசரத்திற்கு போலீசார் ஸ்டேஷன் சென்று கழிப்பறையை பயன்படுத்த வேண்டியுள்ளது. கடும் கோடை வெயில் காலம் என்பதால் போக்குவரத்து பிரிவில் கூடுதல் போலீசாரை நியமித்து பணி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.