இளையான்குடியில் மானாவாரி கண்மாய் சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
இளையான்குடி: இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மானாவாரி கண்மாய்களில் மராமத்து பணிகளை செய்ய வேண்டுமென்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக வைகை பாசனம் மூலம் 41 கண்மாய்களும்,மானாவாரியாக 41 கண்மாய்கள் என மொத்தம் 82 கண்மாய்கள் உள்ளன. இதில் வைகை பாசன கண்மாய்களில் வருடம் தோறும் வைகை ஆற்றில் தண்ணீர் வரும்போது பெரும்பாலான கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து சேர்கின்றன. ஆனால் மானாவாரியாக உள்ள 41 கண்மாய்களில் பொதுப்பணித்துறை நீர்வளத்துறையினர் போதிய பராமரிப்பு பணி செய்யப்படாமல் உள்ளதால் ஏராளமான கண்மாய்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட குணப்பனேந்தல், அண்டக்குடி புதுார், கண்ணமங்கலம், காரைகுளம்,சாத்தமங்கலம்,ஆக்கவயல் அளவிடங்கான், சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மானாவாரி கண்மாய்களில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மராமத்து பணி செய்யாத காரணத்தினால் போதிய நீர் தேங்காமல் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றதோடு விவசாயமும் செய்ய முடியாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: இளையான்குடியில் வைகை பாசனம் மூலம் பயன்பெறும் 41 கண்மாய்களில் மட்டும் பொதுப்பணித்துறை நீர்வளத்துறையினர் வருடம் தோறும் கால்வாய்கள் மற்றும் கண்மாய்களில் உள்ள மடைகள்,தூர்வாருதல், கரைகளை உயர்த்துதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். மேற்கண்ட மானாவாரி கண்மாய்களில் பணிகள் ஏதும் செய்யாமல் இருப்பதால் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் போவது குறித்து குறித்து பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இளையான்குடி பகுதியில் உள்ள 41 மானாவாரி கண்மாய்களிலும் பணிகள் மேற்கொள்வதற்காக திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறோம். நிதி ஒதுக்கீடை பொறுத்து ஒவ்வொரு கண்மாயாக பணிகள் நடைபெற்று வருகின்றன.முழுமையான நிதி ஒதுக்கீடு வந்த பிறகு வந்த பிறகு பணிகள் விரைவாக நடைபெறும் என்றனர்.