நகராட்சி குப்பை கிடங்கில் தீ
மானாமதுரை : மானாமதுரை நகராட்சி குப்பை கிடங்கில் தீ வைத்ததை தொடர்ந்து பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் போராடி அணைத்தனர். மானாமதுரை நகராட்சியில் தினந்தோறும் சேகரமாகும் குப்பை தாயமங்கலம் ரோட்டில் உள்ள வளமீட்பு பூங்கா மற்றும் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வருகின்றனர். குப்பையில் இருந்து இயற்கை உரம் தயார் செய்தும் வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு சிலர் குப்பை கிடங்கிற்கு தீ வைத்ததை தொடர்ந்து தீ மள, மள வென பரவி குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறி தாயமங்கலம் ரோடு வழியாக சென்றவர்கள் சிரமப்பட்டனர். நகராட்சி அதிகாரிகள் மானாமதுரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சேர்ந்து தீயை போராடி அணைத்தனர்.