கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பயிற்சி
சிவகங்கை: தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு சம்பளம், உணவுடன் கூடிய இலவச பயிற்சி சிவகங்கை, காரைக்குடி அரசு ஐ.டி.ஐ.,க்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழில் சார்ந்த நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து அவர்களின் திறனை மேம்படுத்த, அந்தந்த மாவட்ட அரசு ஐ.டி.ஐ.,க்களில் கொத்தனார், கார்பென்டர், கம்பி வளைப்பவர், எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர், பிளாக்ஸ்மித், ஏ.சி., மெக்கானிக், கிளாஸ் ஒர்க், பெயின்டிங், டைல்ஸ் லேயர் ஒட்டுதல் ஆகிய 11 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு சிவகங்கை, காரைக்குடி அரசு ஐ.டி.ஐ.,க்களில் இப்பயிற்சி வழங்கப்படும். நான்கு மாதங்களுக்கு வாரந்தோறும் பயிற்சி அளிக்கப்படும். முதல்வார பயிற்சி செப்., 22ல் துவங்கும். பயிற்சியில் கலந்து கொள்வோருக்கு தினப்படியாக ரூ.800 வீதம் 7 நாட்களுக்கு ரூ.5,600 வீதம் வழங்கப்படும். இலவச உணவு, பயிற்சி கட்டணம் இல்லை. இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்பும் கட்டுமான தொழிலாளர்கள் உதவி கமிஷனர் அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்), தொழிலாளர் நல வாரிய அலுவலகம், காஞ்சிரங்கால், சிவகங்கையில் நேரிலோ, தொலை பேசி எண் 04575 -- 290 590 வை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.