சீவலாதி கண்டுமேக்கியார் தர்காவில் கந்துாரி விழா
இளையான்குடி: இளையான்குடி அருகே சீவலாதி கிராமத்தில் உள்ள தர்காவில் ஹிந்துக்கள் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு சமபந்தி விருந்து வழங்கி வழிபட்டனர். இது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சீவலாதி கிராமத்தில் பழமையான கண்டுமேக்கியார் தர்கா உள்ளது.இந்த தர்காவில் இப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஹிந்துக்கள் வழிபடுவது வழக்கம் .இங்கு வருடம் தோறும் அக்டோபரில் நடைபெறும் கந்துாரி விழாவில் ஏராளமான ஹிந்துக்கள் ஆடுகளை பலியிட்டு பனை ஓலையில் சோறு மற்றும் ஆட்டுக்கறியை படைத்து வழிபட்டு வருகின்றனர். இந்தாண்டு நடைபெற்ற விழாவிற்காக சீவலாதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஹிந்துக்கள் ஒன்றிணைந்து 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு தர்காவில் மல்லிகைப்பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து பூஜை செய்தனர்.பின்னர் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கறிசோறை அன்னதானமாக வழங்கினர். வெல்லம், குங்குமம்,விபூதி ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. முஸ்லிம்களின் தர்காவில் ஏராளமான ஹிந்துக்கள் பங்கேற்று வழிபட்டு வருவது இன்றைக்கும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.