உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 11.46 லட்சம் மரக்கன்று நட இலக்கு அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

11.46 லட்சம் மரக்கன்று நட இலக்கு அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

சிவகங்கை, : மாவட்டத்தில் காடுகளில் 11.46 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார். சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் வனத்துறைக்கு சொந்தமான 30 ஏக்கரில் பலன் தரக்கூடிய 250 மரக்கன்றுகள் நடும் திட்ட துவக்க விழா நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். உதவி வன பாதுகாவலர் மலர்கண்ணன் வரவேற்றார். சிவகங்கை வன கோட்ட அலுவலர் ரேவதி, உதவி வன பாதுகாவலர் கார்த்திகேயன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், நகராட்சி துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான் பங்கேற்றனர். அவர் பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் பசுமை தமிழ்நாடு இயக்கமாக கொண்டாடுகிறோம். பலன் தரக்கூடிய, பசுமையை தரும் மரக்கன்றுகளை நடுவதை இலக்காக வைத்துள்ளோம். சிவகங்கை மாவட்ட வனத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறையின் கீழ் முதற்கட்டமாக 250 மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைக்கிறோம். அரசு மட்டுமின்றி பொதுமக்கள், தன்னார்வலர், பசுமை விரும்பிகள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம். தமிழகத்தில் வனக்காடுகள் பரப்பு 23.09 சதவீதமாக தான் உள்ளது. இதை 33 சதவீதமாக அதிகரிக்க, நிலப்பரப்பில் மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சியை ஏற்படுத்த வேண்டும். 2022 ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு கோடி மரக்கன்று வரை தமிழக அளவில் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 11.46 லட்சம் மரக்கன்றுகள் நட வனத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார். வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி