உள்ளூர் செய்திகள்

பயணிகள் அவதி

மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் அடிக்கடி பஞ்சராகி நடுரோட்டில் நிற்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான டவுன் பஸ்கள் ஓட்டை, உடைசலாகவும், நடு ரோட்டிலேயே அவ்வப்போது பழுதாகி, பஞ்சராகி நிற்பது தொடர்கிறது.நேற்று மதியம் மானாமதுரையிலிருந்து இருஞ்சிறை வழியாக நரிக்குடி சென்ற அரசு டவுன் பஸ் மானாமதுரையிலிருந்துசிவகங்கை செல்லும் போது அண்ணாத்துரை சிலை மேம்பாலம் இறக்கத்தில் விநாயகர் கோயில் அருகே பஞ்சராகி நின்றது.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இயக்கப்படும் டவுன் பஸ்கள் இரவில் ஆங்காங்கே பழுதாகி நிற்பதால் உரிய நேரத்திற்கு வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம். ஓட்டை, உடைசல் பஸ்களை மாற்ற வேண்டுமென்று போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினர். அரசு டவுன் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கூறியதாவது: பஸ்சில் உள்ள பழுதை நீக்க கோரி டெப்போவில் கூறினால் அதனை சரி செய்வதற்கு உரிய பழுது நீக்குபவர்கள் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் அவதிப்பட்டு வருகிறோம். பஸ்களில் மாற்று டயர் இல்லாத காரணத்தினால் பஞ்சராகி விட்டால் அதனை சரி செய்வதற்கு சிவகங்கையிலிருந்து வருவதற்கு நீண்ட நேரம் ஆவதால் ரோட்டில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஓட்டை, உடைசல் பஸ்களுக்கு பதிலாக புதிய அல்லது தரமான பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், டெப்போவில் பஸ்களை தினமும் பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundaran manogaran
செப் 24, 2024 08:39

விடியல் பயணம் பேருந்துகள் பல்லாண்டு பழையன. காயலான்கடையிலிருந்து வாங்கியவை போலவே இருக்கின்றன. எல்லா ஊர்களிலும் இதே நிலைதான்... தமிழர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்... இதையும் தாங்குவார்கள்.... காசு வாங்குவார்கள்...ஓட்டும் போடுவார்கள்... புலம்புவார்கள்...


புதிய வீடியோ