உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கைக்கு வராத பெரியாறு கால்வாய் தண்ணீர்

சிவகங்கைக்கு வராத பெரியாறு கால்வாய் தண்ணீர்

சிவகங்கை: பெரியாறு கால்வாயில் இருந்து சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்னும் வந்து சேரவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.இம்மாவட்டத்தில் பெரியாறு, வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர், மேலுார் அருகே கள்ளந்திரி மதகு அணையில் சிவகங்கை மாவட்டத்திற்கான பங்காக ஆண்டு தோறும் திறந்து விடப்படும். நாள் ஒன்றுக்கு 60 கன அடி வீதம் 45 நாட்களுக்கும், அடுத்த 75 நாட்கள் முறை வைத்தும் என ஒட்டு மொத்தமாக 120 நாட்களுக்கு 7,200 கன அடி வரை கட்டாயம் தண்ணீர் வழங்க வேண்டும்.கள்ளந்திரியில் திறக்கப்படும் தண்ணீர் சிவகங்கை மாவட்டம், ஆதினிபட்டி கண்மாயில் இருந்து கட்டாணிபட்டி 1, 2 கால்வாய், 48 வது மடை, ஷீல்டு, லெசீஸ் கால்வாய்கள் வழியாக சோழபுரம் எட்டிச்சேரி கண்மாய் வரை 136 கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம் 6,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று, ஒரு போக நெல் சாகுபடி செய்யப்படும்.செப்., 18 ல் ஒரு போக சாகுபடிக்கென பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் இது வரை 48 வது மடை கால்வாய், கட்டாணிபட்டி 1 மற்றும் 2 வது கால்வாய்களை எட்டிக்கூட பார்க்கவில்லை.இது குறித்து பெரியாறு, வைகை 5 மாவட்ட பாசன விவசாயிகள் சங்க சிவகங்கை தலைவர் ஆர்.எம்.சேதுராமன் கூறியதாவது: தற்போது வைகை அணையில் இருந்து விநாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்திற்கான தண்ணீரும் சேரும். ஆனால், இந்த தண்ணீர் முழுமையாக சிவகங்கை மாவட்டத்திற்குள் வரவில்லை.மேலுாரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முழுமையாக சிவகங்கைக்கான தண்ணீரை திறந்து விட வேண்டும். அப்போது தான் ஒரு போக நெல் சாகுபடி செய்ய முடியும், என்றார்.பொதுப்பணித்துறை (நீர்வளம்) உதவி கோட்ட பொறியாளர் குபேந்திரன் கூறியதாவது: கடும் வெயில் அடிப்பதால், கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக செல்லாமல், நீர் உறிஞ்சி விடுகிறது. இன்னும் 2 நாட்களில் சிவகங்கைக்கான தண்ணீர் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி