பள்ளி அருகே பன்றிகள்
தேவகோட்டை : தேவகோட்டை அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ளது நகராட்சி 16வது நடுநிலைப் பள்ளி. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் அருகே நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தாங்கள் சேகரிக்கும் குப்பை, மக்கள் தங்கள் வீட்டு குப்பை, வியாபாரிகள் கோழி கழிவை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. துர்நாற்றத்தில் தான் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் நாள் முழுவதும் வாழும் சூழ்நிலை. சேரும் குப்பைகளை முழுமையாக அள்ளாததால் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிப்போர் நகராட்சியில் புகார் செய்தும் பலனில்லை நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு குப்பையை அகற்றி நோய்களிலிருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.