பிரதமரின் பயிர் காப்பீடுத் திட்டம் பிரீமிய கால அவகாசம் நீட்டிப்பு
சிவகங்கை: பிரதமரின் பஷல் பீமா யோஜனா திட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சோளம், நெல், பச்சை பயறு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்ட பருத்தி விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்ய ஜூலை 1 கடைசி நாளாக இருந்தது. தென்காசி விவசாயிகள் மக்காச்சோளம், சோளம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை விவசாயிகள் நெல், நாமக்கல் விவசாயிகள் பச்சை பயறை காப்பீடு செய்ய ஜூலை 15 கடைசி நாளாக இருந்தது.இந்நிலையில் விவசாயிகளின் தொடர் கோரிக்கைகளை அடுத்து இம்மாவட்டங்களில் நெல், பருத்தி, மக்காச்சோளம், சோளம், பச்சை பயறு நடவு செய்துள்ள விவசாயிகள் தங்களது பயிர் காப்பீட்டிற்கான பிரீமியத்தொகைகளை அந்தந்த தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், தேசிய வங்கிகளில் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டித்து தமிழக வேளாண் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.