உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சொக்கநாதபுரம் அரசு பள்ளியில் ஆசிரியரை மாற்றக்கோரி போராட்டம்

சொக்கநாதபுரம் அரசு பள்ளியில் ஆசிரியரை மாற்றக்கோரி போராட்டம்

சிவகங்கை; மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரை மாற்றக்கோரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ளது சொக்கநாதபுரம். இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 238 மாணவர்கள் படிக்கின்றனர். 10 ஆசிரியர்கள், 2 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் வகுப்பில் சரியாக பாடம் நடத்தவில்லை எனவும், வகுப்பில் அரசியல் பேசுவதாகவும், பள்ளி துவங்கும் முன் இறை வணக்க நேரத்தில் வெயிலில் மாணவர்களை நீண்ட நேரம் நிற்க வைப்பதாகவும் குற்றச்சாட்டுகளை கூறி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் சொக்கநாதபுரம் பாகனேரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வெயிலின் தாக்கத்தால் 6 ம் வகுப்பு மாணவன் ஒருவர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வசந்தாராணி என்ற பெண் மயங்கினர். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்தனர்.மதியம் 12:00 மணி வரை நடந்த இந்த போராட்டத்தில் தாசில்தார் சிவராமன், இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.ஏ., நடேசன் ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் கலைந்து செல்ல மறுத்தனர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து பேச்சுவார்தை நடத்தினார். இதனை தொடர்ந்து பெற்றோர் கலைந்து சென்ற பிறகு மீண்டும் பள்ளி 2:30 மணிக்கு தொடர்ந்து நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ